இந்திய பாகிஸ்தான் போரில் வீர மரணமடைந்த தமிழகத்தின் ராஜபாளையத்தை சேர்ந்த வீரருக்கு, 57 வருடங்களுக்குப் பிறகு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் அழகர் அர்ஜுன். இவர், ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, கடந்த 1965 ஆம் ஆண்டு, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் தன்னுடைய 25 வயதில் வீர மரணமடைந்தார்.
அப்போது இவரது உடலை அடக்கம் செய்த இந்திய ராணுவம், அவர் அணிந்திருந்த உடையை மட்டும் குடும்பத்தினருக்கு அனுப்பி உள்ளனர். ராணுவ வீரர் மரணமடைந்தால் வழக்கமாக, அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவது வழக்கம்.
போர் சமயமாதலால் அவருக்கு செலுத்த வேண்டிய இறுதி மரியாதை விடுபட்டது. தற்போது இந்தியா சுதந்திரமடைந்து 75 வருடங்களானதை கொண்டாடும் விதமாக, போரில் உயிர் நீத்த மூத்த வீரர்களுக்கு விடுபட்ட இறுதி மரியாதை மத்திய அரசு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அழகர் அர்ஜூனனுக்கு நெல்லையில் செயல்படும் 5-வது தமிழ்நாடு தேசிய மாணவர் படையைச் சேர்ந்த கர்னல் போபி ஜோசப் தலைமையில், சுபேதார் நைப், சுபேதார், ஹவில்தார் உள்ளிட்ட அதிகாரிகளும், வருவாய் துறையினர் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்களும் அவரது உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி குடும்பத்தினர், அதிகாரிகள், மாணவர்கள், நகரின் முக்கிய அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், வருவாய் துறையினரும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அழகர் அர்ஜூனன் நினைவாக, அவரது குடும்பத்தினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரருக்கு 57 வருடங்களுக்கு பிறகு வழங்கப்பட்ட இறுதி மரியாதை, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.