நிலக்கோட்டை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த 15 பவுன் தங்க நகையை எடுத்த கூலித் தொழிலாளி, காவலரின் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி அருகே முருகதூரான்பட்டி அருகேயுள்ள மதுரை சாலையில் பை ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற குல்லக்குண்டை சேர்ந்த அழகுராஜா என்ற கூலித் தொழிலாளி அந்த பையை பார்த்துள்ளார். உடனே பையை பிரித்து பார்த்தபோது அதில் நகை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் மாரிமுத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து அங்குவந்த காவலர் மாரிமுத்து பையை கைப்பற்றி சோதனையிட்டார்.
அதில் இருந்த வங்கி புத்தகத்தில் உள்ள விலாசத்திற்கு தொடர்பு கொண்டபோது நிலக்கோட்டையைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் தனது மனைவி வைதீஸ்வரியுடன் மதுரைக்கு சென்று திரும்பும் வழியில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பை தவறி விழுந்து விட்டது. அதனைத் தேடி மீண்டும் மதுரைக்கு சென்று இருப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து பையை தவற விட்டவர்களை வரவழைத்த காவலர் மாரிமுத்து, பையை கண்டெடுத்த அழகுராஜாவிடம் பையை கொடுத்து வைத்தீஸ்வரியிடம் ஒப்படைக்கச் சொன்னார். தவறவிட்ட தங்க நகையை மீட்டு உரியவரிடம் கொடுத்த கூலித் தொழிலாளிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.