தாம்பரம் அருகே தெரு நாய்க்கு உணவு கொடுப்பதற்காகச் சென்றவர், மின்கம்பம் உடைந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி இறந்தார்.
சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சேது என்பவர் தெரு நாய்க்கு உணவளிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது சேதம் அடைந்திருந்த சிமெண்ட் மின்கம்பம் உடைந்து சேது மீது விழுந்தது. மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததால் சேது மீது உயரழுத்த மின்சாரம் பாய்ந்தது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சேதுவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சேது பரிதாபமாக உயிரிழந்தார்.
சிட்லபாக்கத்தில் மின்கம்பங்கள் சேதம் அடைந்திருப்பது குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே சேதுவின் உயிரிழப்புக்கு காரணம் என்றும், அவர்கள் புகார் கூறினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை முகலிவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். அதற்கடுத்த இரண்டாவது நாளிலேயே மற்றுமொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விழுப்புரத்தில் ஒரு சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்.