சென்னையில் இருசக்கர வாகனத்தை அதன் உரிமையாளரே அடித்து உடைத்து நெருப்பு வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் கடந்த ஜனவரி மாதம் இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். வாகனத்தை வாங்கிய நாள் முதலே அதில் பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் இருசக்கர வாகனத்தில் வெளியே செல்லும் போதெல்லாம் பழுதாகி நின்றுவிடுவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி பழுது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது.
தொடர்ந்து பழுதுகள் ஏற்பட்ட போதும், வண்டியை விற்காமல் அவர் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் இருசக்கர வாகனம் சரிவர இயங்காததால், சிலமுறை கோபிநாத் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. இதனால் அவர் விரக்தியடைந்து, இருசக்கர வாகனத்தை வாங்கிய ஷோரூமுக்கு சென்று முறையிட்டுள்ளார். அத்துடன் இருசக்கர வாகனத்தின் தரம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். தன் வாகனத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் ஆவேசமாக கேட்டுள்ளார்.
அதற்கு ஷோரூம் ஊழியர்கள் சில பதில்களை அளித்துள்ளனர். கோபிநாத் அதில் திருப்தி அடையாததால், ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். பதிலுக்கு ஊழியர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத், ஷோரூம் முன்பே தனது இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்துள்ளார். மேலும் அதற்கு தீ வைத்துள்ளார். திடீரென ஒருவர் தனது பைக்கிற்கு தீ வைத்ததால், அது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.