கரூர் ஏமூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். பிறந்தது முதல் பார்வையற்ற இவர் பலரும் ஆச்சரியப்படும் வகையில் மிக்சி, கிரைண்டர், டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை பழுது நீக்கி வருகிறார். முற்றிலும் பார்வையற்ற இவர் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை பழுது நீக்குவதை பலரும் ஆச்சரியம் விலகாமல் பார்த்துச் செல்கின்றனர்.
பிளஸ் 2 வரை கரூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த இவருக்கு கனவெல்லாம், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை பழுது நீக்கும் தொழில் பணிபுரிய வேண்டும் என்பதே. சென்னையில் பார்வையற்றோருக்கென உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சியில் ஓராண்டு பயிற்சி பெற்றுள்ளார். அங்கு அடிப்படை பயிற்சி பெற்று, கரூரிலுள்ள சில தனியார் பழுது நீக்கும் கடைகளுக்கு சென்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது சிலர் இவருக்கு நிறைய சொல்லிக் கொடுத்துள்ளனர். அப்பயிற்சியை கொண்டு இவர் தனது வீட்டிலேயே பேன், மிக்ஸி, கிரைண்டர், டிவி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை பழுது நீக்கி வருகிறார்.
இவருக்கு பார்வையில்லை என்றாலும் அவரது கைகள் தனக்கு முன்னே கீழே கிடக்கும் ஸ்குரு டிரைவர் உள்ளிட்ட பல பொருட்களை தானே அறிந்துவிடுகிறது. தனக்கு தேவைப்படும் பொருட்களை சற்றும் சிரமப்படாமல் அவரே எடுத்து, வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறார். டி.வியை பிரித்து அதிலுள்ள சர்க்யூட் போர்டிலிருந்து ஒரு பொருளை நீக்கிவிட்டு, புதிதாக ஒரு பொருளை சரியாக அதே இடத்தில் பொருத்தி சால்டிரிங் செய்கிறார். எந்த இடத்திலும் சிறு தடுமாற்றத்தை கூட நம்மால் காண முடியவில்லை!
எலக்ட்ரானிக்ஸ்தான் வாழக்கை…
“பிளஸ் 2 படிச்ச பிறகு, பார்வையற்றவர்கள் பொதுவா ஆசிரியர் பணிக்குத்தான் பெரும்பாலும் படிப்பாங்க. ஆனா, நான் எல்க்ட்ரானிக்ஸ் துறையில இருக்கனும்னு முடிவு எடுத்தேன், சென்னையில் கோர்ஸ் படிச்ச பிறகு அடிப்படை நுட்பம் தெரிஞ்சது. அதை வைத்து ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருள்ல என்ன குறைன்னு எளிதா கண்டுபிடிச்சுடுவேன். கடினமான சில குறைகளை மட்டும் எலக்ட்ரானிக்ஸ் துறையில இருக்கிற மற்ற நண்பர்கள் உதவியுடன் சரி செய்கிறேன்” என்றவர் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களில் உள்ள குறைகளை கண்டறியும் மல்டி மீட்டர் சாதாரணமாக உள்ளதாகவும், குறைகளை கண்டறிந்து குரல் பதிவு மூலம் தெரியப்படுத்தும் வாய்ஸ் ரெககனைசிங் மல்டி மீட்டர் இருந்தால் இன்னும் நிறைய வேலைகள் வரும் என்கிறார் பாலசுப்பிரமணியன்.
தம்பி சாதிக்கிறான்…
பாலசுப்பிரமணியன் சகோதரர் நல்லுசாமியும் பார்வையற்றவரே. இவர் தனது வீட்டருகிலேயே சிறிய பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நாங்க இருவருமே பார்வையற்றவர்கள் ஆனால், தம்பி எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருக்கனும்னு வைராக்யமா இருந்தான். அது எனக்கு சந்தேசமாக உள்ளது என்கிறார் நல்லுசாமி.
பார்வையில்லை என்பதற்காக என்றைக்கும் வருத்தப்பட்டதில்லை என்று கூறும் பாலசுப்பிரமணியன் பிறந்தது முதல் வெளிச்சத்தையே காணாதவர். அதனால் என்ன? அவரால் அதை மீறி சாதிக்க முடிந்துள்ளது.