கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது காட்டு யானை விநாயகம். இது கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட யானை அடுத்த தினமே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகள் கொண்டுசென்று விடப்பட்டது.
தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை விநாயகன், கர்நாடக வனப்பகுதி மற்றும் முதுமலை புலிகள் காப்பகவனப் பகுதிக்குள் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அமைந்துள்ள நாகம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான வாழை மரங்களை தின்று சேதப்படுத்தியது.
விநாயகன் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறை தரப்பில் எந்தவித தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் காட்டு யானை விநாயகன் முதுமலை வனப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வந்து செல்லும் காட்சி முதன்முறையாக சிசிடிவி கேமராவில் பதிவாகியது. கழுத்தில் ரேடியோ காலர் உடன் விநாயகன் யானை குடியிருப்பை ஒட்டி சுற்றி திரிவது சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியது.
இந்த நிலையில் ஆரம்பத்தில் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்று சுற்றித்திரிந்த விநாயகன் யானை, தற்போது முதுமலை வனப்பகுதிக்கு திரும்பி உள்ளது. குறிப்பாக பொதுமக்களின் குடியிருப்புகள் உள்ள பகுதிக்கு அருகில் முகாமிட்டு இருக்கிறது. மேலும் விளைநிலங்களுக்குள் தினமும் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் முதுமலை மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதற்கிடையே விநாயகன் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடியோ காலரை காணவில்லை. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அந்த கருவியின் விலை ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. விநாயகன் யானையின் கழுத்தில் இருந்து ரேடியோ காலர் மாயமானது எப்படி?, வனப்பகுதிகளுக்குள் எங்கேயும் விழுந்து கிடக்கிறதா? என்பது தெரியவில்லை. மேலும் அந்த கருவியில் இருந்து எந்தவொரு சிக்னலும் கட்டுப்பாட்டு அறைக்கு வரவில்லை. இதனால் முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.