மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் புதுக்கோட்டை பெண்ணை மீட்க தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம். இவருக்குத் திருமணமான இரண்டு மகள்களும் திருமணம் ஆகாத ஒரு மகளும் உள்ளனர். கடந்த மாதம் லட்சுமணன் என்பவர் ஜெயமிடம் வெளிநாட்டில் வீட்டு வேலை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தைக் கூறி ரூ. 70 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மஸ்கட்டிற்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
ஆனால், மஸ்கட்டில் ஜெயமிற்கு நடந்ததோ வேறு. அங்கு, அவரை ஒரு அறையில் அடைத்துவைத்து, 'இரண்டு லட்சம் பணம் தந்தால்தான் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப முடியும்' என்று கூறி சிலர் சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து ஜெயம் அவரது வீட்டிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த ஜெயம் உறவினர் போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தி ஒன்றினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “எங்கள் தூதரகம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. திருமதி ஜெயம் விரைவில் வீடு திரும்ப எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.