சென்னை கூவம் நதிக்கரைகளில் சிறு காடுகளை வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது சென்னை மாநகராட்சி. பழமரங்கள் முதல் மூலிகைகள் வரை 23 ஆயிரம் சதுர அடியில் மியாவாக்கி முறையில் சிறு காடுகளை வளர்க்கவுள்ளார்கள். மியாவாக்கி காடுகள் பற்றிய செய்தியை நியூஸ்மினிட் இணையதளம் வெளியிட்டுள்ளது.
ஜப்பானிய தாவரவியல் அறிஞர் ’அகிரா மியாவாக்கி’ உருவாக்கிய காடு வளர்க்கும் முறை, அவரது பெயரில் அழைக்கப்படுகிறது. பயனற்ற நிலத்தைப் பதப்படுத்தி அந்த மண்ணுக்குரிய தாவரங்கள் வளர்ப்பதை அவர் ஊக்கப்படுத்தினார். 90களில் ஜப்பான் தொடங்கி உலகம் முழுவதும் மியாவாக்கி முறை பரவலாக வளர்ந்தது.
பெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் பிரபலமான மியாவாக்கி காடு வளர்க்கும் முறை தற்போது சென்னையில் அறிமுகமாகியுள்ளது. இந்த வகையிலான சிறு காடு கோட்டூர்புரம் அருகிலுள்ள கால்வாய் ஓரத்தில் உருவாகவுள்ளது. ஏற்கெனவே அது குப்பைகள் கொட்டும் இடமாக இருந்தது.
இதுபற்றிப் பேசிய சென்னை மாநகராட்சி அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ், "முதல் மியாவாக்கி முறையிலான சிறு காடு கோட்டூர்புரத்தில் உருவாகிறது. 2020ஆம் ஆண்டுக்குள் தென் சென்னை முழுவதும் 10 காடுகள் உருவாக்கப்படும் " என்று தெரிவித்தார்.
சென்னையில் முகலிவாக்கம், வளசரவாக்கம் பகுதிகளில் துவக்கம் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மியாவாக்கி காடுகள் வளர்க்கப்படவுள்ளன.