தாம் வகிக்கும் ஐபிஎஸ் பதவி என்பது கடினமாக உழைத்து ரத்த வியர்வை சிந்தி, தமது சொந்த உழைப்பில் பெற்றது என திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி வருண் குமார் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து அந்தக் கட்சியை சேர்ந்த சிலர் எக்ஸ் சமூக வலைதளத்தில் எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினரை பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் எக்ஸ் வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாகவும், இது போன்று அவதூறு பரப்புகிறவர்களையும், அதனை தூண்டுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ”நான் வகிக்கும் ஐபிஎஸ் மற்றும் எஸ்.பி பதவி என்பது திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ வந்தது அல்ல. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வியர்வை சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை. ” என்ற கருத்துடன் வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸாக வைத்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடனான மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருண்குமார் ஐபிஎஸ் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.