சென்னையை சேர்ந்த காவலர் ஒருவர் தான் படித்த அரசுப் பள்ளிக்கு தன்னுடைய 2 மாத ஊதியத்தை வழங்கி உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரபிரதேசத்தை சொந்தமாக கொண்ட வெங்கடேஷ் ராவ் குடும்பத்தினர் 1971 ல் அய்யப்பாக்கத்திற்கு குடி பெயர்ந்தனர். இதைத்தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு அப்பகுதில் உள்ள அரசுப்பள்ளியில் வெங்கடேஷ் ராவ் சேர்க்கப்பட்டார். இவர் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அந்த பள்ளியில் பயின்று வந்துள்ளார். அதன் பின்னர் வேறு பள்ளிக்கு மாறிவிட்டார்.
இதையடுத்து மேற்படிப்பு படித்து போலீஸ் வேலையில் சேர்ந்தார். தற்போது சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் படித்த அரசுப் பள்ளிக்கு தன்னுடைய 2 மாத ஊதியத்தை தானமாக வெங்கடேஷ் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ நான் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தேன். அங்கு எவ்விதமான படிப்பு வசதிகளும் அவ்வளவாக இல்லை. இந்த பள்ளிதான் என்னுடைய கேரியரை தேர்வு செய்ய வழிவகுத்தது. நீண்ட நாட்களாகவே நான் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. அதனால் தற்போது தனது 2 மாத ஊதியத்தை அங்கு படிக்கும் மாணவர்களின் பள்ளி பை, சீருடைகள், சூ ஆகியவை வாங்க உதவி செய்துள்ளேன். இன்னும் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என எண்ணுகிறேன்” எனத் தெரிவித்தார்.