சென்னை அம்பத்தூர் அருகே கந்துவட்டி கொடுமையால் மளிகைக்கடைக்காரர் ஒருவர் தனது கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொரட்டூரை சேர்ந்த 43 வயதான செல்வகுமார் மளிகைக் கடை நடத்தி வந்தார். கந்து வட்டிக்கு 2 பேரிடம் 15 லட்சம் ரூபாயை அவர் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்த இருவரும் நெருக்கடி தந்த நிலையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான செல்வகுமார், கடையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
15 லட்சம் ரூபாயை கடன் வாங்கி 44 லட்சம் ரூபாயை வட்டியாக கட்டியுள்ளதாகவும் இதற்குமேல் தன்னால் கட்ட முடியாது என்பதால் தற்கொலை செய்வதாகவும் செல்வகுமார் குறிப்பு எழுதி வைத்துள்ளார். கடன் கொடுத்த இருவரே தன் மரணத்திற்கு காரணம் என்றும் தற்கொலைக்குறிப்பில் செல்வகுமார் எழுதியுள்ளார்.
இதையடுத்து செல்வகுமாருக்கு கடன் கொடுத்த பிரகாஷ், தியாகராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)