குழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிமேகலை. இவரது மகள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். மகளை நேரில் சென்று பார்த்துக்கொள்வதற்காக மணிமேகலை மருத்துவமனைக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். ஈரோடு உழவர் சந்தை வழியாக சென்ற அவரை, சில மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர். தயக்கத்துடன் நின்ற மணிமேகலையிடம், தாங்கள் காவல்துறையினர் என அந்த கும்பல் கூறியுள்ளது.
இதையடுத்து மணிமேகலை ‘சொல்லுங்க’ என்ன விஷயம்? எனக் கேட்க, அந்தப் பகுதியில் அதிகம் செயின் பறிப்புகள், வழிப்பறிகள் நடைபெறுவதாக அந்த மர்ம நபர்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். மணிமேகலையுடன் அச்சமடைந்து குழம்பியுள்ளார். உடனே அந்த கும்பல் உங்கள் நகைகளை கழட்டி காகிதத்தில் மடித்து எடுத்துச்செல்லுங்கள் எனக்கூறியுள்ளது. மணிமேகலை நகைகளை கழட்டியதும், அதை அந்தக் கும்பல் வாங்கி காகிதத்தில் வைத்து மடித்துள்ளது.
பின்னர் மணிமேகலையிடம் மடித்த காகிதத்தை கொடுத்து, ‘பத்திரமாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்’ என்று கூறியுள்ளது அந்தக் கும்பல். மணிமேகலையும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் காகிதத்தை பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது காகிதத்திற்குள், நகைகள் இல்லாமல் கற்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து வருத்தமடைந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினரிடம் மணிமேகலை புகார் தெரிவிக்க, அவர்களும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் மணிமேகலை கூறிய அடையாளங்களின் அடிப்படையில், திருடர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.