“கிளி ஜோதிடரைக் கொன்றது ஏன்?”- தவறான உறவில் தவித்த ரகு வாக்குமூலம்

“கிளி ஜோதிடரைக் கொன்றது ஏன்?”- தவறான உறவில் தவித்த ரகு வாக்குமூலம்
“கிளி ஜோதிடரைக் கொன்றது ஏன்?”- தவறான உறவில் தவித்த ரகு வாக்குமூலம்
Published on

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள பூங்கா அருகே கடந்த 24ம் தேதி கிளி ஜோதிடர் ரமேஷை ஹெல்மட் அணிந்த நபரால் கொடுராமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருப்பூர் வடக்கு போலீசார் கடந்த மாதம் இடுவம்பாளையம் பகுதியில் ஜோதிடர் ரமேஷை தாக்கிய அக்கவுண்டன்ட் ரகுவின் மீது தங்களின் சந்தேக பார்வையைக் கொண்டு சென்றனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த ரகுவின் வீட்டிற்கும் தனிப்படை போலீசார் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் ரகு தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் ரகுவை தீவிரமாக தேடிவந்த நிலையில் 26ம் தேதி ரகு சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். 

இதனைத்தொடர்ந்து ஜனவரி 3ம் தேதி அன்று போலீசார் 3 நாள் காவலில் எடுத்து அவரை விசாரித்தனர். அப்போது ரகு கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திருப்பூர் பனியன் நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிந்த ரகு, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பர்பாளையம் பகுதியில் தனது மனைவி குழந்தைகளுடன்  குடியிருந்து வந்துள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டில் குடியிருந்தவரின் மனைவி மோகன ப்ரியா மீது இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை மயக்க முடிவெடுத்த ரகு, கிளி ஜோதிடர் ரமேஷின் உதவியை நாடியுள்ளார். ரமேஷிடம்  50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு வசியம் செய்து தந்துள்ளார் ஜோதிடர். இது நடந்த ஒரே வாரத்தில் ரகுவிற்கு மோகன ப்ரியாவுடன் காதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே கிளி ஜோதிடரின் வசியம் பலித்து விட்டதாக நம்பி ரகு, தனது குடும்பத்தை சொந்த ஊருக்கு அனுப்பி விட்டு தனது காதலியுடன் மயிலாடுதுறையில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தச் சூழலில் இவர்களைத் தேடி வந்த மோகன ப்ரியாவின் குடும்பத்தினர் மயிலாடுதுறையிலுள்ள இவர்களைக் கண்டறிந்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அங்கு மோகன ப்ரியா மீண்டும் தனது கணவருடன் செல்ல சம்மதித்ததால் ரகுவிடமிருந்து பிரித்து அனுப்பி வைத்துள்ளனர். 

இதில் மனமுடைந்த ரகு, மீண்டும் கிளிஜோதிடர் ரமேஷை தொடர்பு கொண்டார். இம்முறை இரண்டரை லட்சம் வரை பெற்ற ரமேஷ், இவருக்கு வசியம் செய்து தரவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு கடந்த ஆண்டு ரமேஷை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இது குறித்து மங்கலம் காவல்நிலையத்திலும் ரமேஷ் புகார் அளித்துள்ளார். இதில் காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார் என்பது ரகு அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தப் பிரச்சனைக்கு பின்னர் தென்னாப்ரிக்கா சென்ற ரகு, அங்கு ஒன்றறை லட்ச ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்துள்ளார். எனினும் தனது காதலியின் நினைவு வாட்டவே ஒருமாதச் சம்பளம்கூட வாங்காமல் அங்கிருந்து மீண்டும் தமிழகம் வந்துள்ளார். திருச்சியில் பணியில் சேர்ந்த ரகு, அங்குள்ள வழிப்போக்கு ஜோதிடரிடம் தனது கதையை கூறியுள்ளார். அதற்கு அவர் முதலில் வசியம் செய்த ஜோதிடர் ரமேஷ் ஏமாற்றி விட்டதாகவும், அந்தப் பெண்ணிற்கு வேறு வசியம் வைத்து விட்டதாகவும் அதனால் தான் உனது காதலி உன்னை விட்டு சென்றுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகு, பணத்தையும் பெற்றுக் கொண்டு ஜோதிடர் தன்னை ஏமாற்றி விட்டதால் ஜோதிடரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார் என்று போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் மாதம் 23ம் தேதி திருப்பூர் வந்த ரகு, ஜோதிடரை கண்காணித்துள்ளார். பின்னர் 24ம் தேதி மதியம் ஜோதிடர் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த போதுதான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மூலம் ரமேஷை வெட்டி கொன்றதாகவும் அடையாளம் தெரியாமல் இருக்க ஹெல்மட் அணிந்து சென்று வெட்டியதாகவும் வாக்கு ரகு இப்போது மூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ரமேஷை வெட்டிக் கொன்ற கத்தியை நொய்யல் ஆற்றங்கரையில் வீசிவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டு பஸ் பிடித்து தப்பிச் சென்றதாகவும் ரகு தெரிவித்தது தெரிய வந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து போலீசார் தன்னைத்தேடி தனது வீடு வரை வந்ததால் வேறு வழியின்றி நீதிமன்றத்தில் சரணடைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் மற்றும் தலைக்கவசம் போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் ரகுவை மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். வழிப்போக்கர்  ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி மற்றொரு ஜோதிடரைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com