தீயணைப்பு நிலைய அலுவலர் ஒருவர் போலீஸ் எஸ்.ஐ என போலி அடையாள அட்டை தயார் செய்து அதன்மூலம் வசூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மேல்திருத்தணியில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது. இதன் நிலைய அலுவலராக என்.பெருமாள் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாடு காவல்துறை, வேலுார் மாவட்டம், காவல் உதவி ஆய்வாளர் என போலியாக ஒரு அடையாள அட்டை தயார் செய்து அதன் மூலம் திருத்தணி பகுதியில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு நிலைய உயரதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
தகவலறிந்த அதிகாரிகள் பெருமாளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெருமாள் போலீஸ் எஸ்.ஐ என போலி அடையாள அட்டை தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர் பல வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து அடையாள அட்டையை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.