தேனி அருகே தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தகோரி அதிகாரிகள் நெருக்கடி தந்ததால், விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்கொடி. விவசாயம் பார்த்து வரும் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்நிலையில் அந்த விவசாய நிலத்தை அடமானம் வைத்து தேனியிலுள்ள தனியார் வங்கியில் கடந்த 2017 ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். கடன் வாங்கிய பிறகு முதல் தவணையாக 27 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளார். அதன் பிறகு கடன் தவணைகளை செலுத்த முடியாமல் போனது. கடன் வாங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிய நிலையில் கடனை செலுத்தகோரி தனியார் வங்கி ஊழியர்கள் நேரிலும், தொலைபேசியிலும் அடிக்கடி நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தவில்லையென்றால் அடமானம் வைத்த விவசாய நிலத்தை ஜப்தி செய்வோம் எனக்கூறி தனியார் வங்கி ஊழியர்கள், அதற்கான நோட்டீசையும் வீட்டு சுவற்றில் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்து வேதனையுடன் இருந்த விவசாயி ஜெயக்கொடி, கடந்த 13 ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயக்கொடி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சூழலில் விவசாயி ஜெயக்கொடி உயிரிழப்புக்கு காரணமான தனியார் வங்கி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.