’’எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள்’’-திருச்சி ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட அதிர்ச்சி புகார்!

’’எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள்’’-திருச்சி ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட அதிர்ச்சி புகார்!
’’எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள்’’-திருச்சி ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட அதிர்ச்சி புகார்!
Published on

’’தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தங்களை துன்புறுத்துகின்றனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அல்லது எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள்’’ என பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (வயது 52). இவர் இன்று தனது குடும்பத்தினருடன் திருச்சி ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுக்க வந்துள்ளார். அந்த மனுவின் அடிப்படையில், இவர் கத்தார் நாட்டிலுள்ள தனியார் ஹோட்டலில், கடந்த 15 ஆண்டுகாலம் மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். அந்த வேலையை விட்டு விட்டு திருச்சிக்கு வந்து மனைவி மற்றும் இருமகள்களுடன் வாழ்ந்துவருகிறார். ரவியைத் தொடர்ந்து, மேலும் இரண்டு ஊழியர்கள் வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கின்றனர். ஊழியர்கள் தொடர்ந்து வேலையை விட்டுச்செல்வதால் வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன் மன வேதனையடைந்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலுவிடம், வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன் தனது வேதனையை தெரிவித்திருக்கிறார்.

பின்னர் இவர்கள் கூட்டாகத் திட்டமிட்டு, கத்தார் நாட்டில் வசந்தபவன் ஹோட்டலில் மூன்றரை கோடி ரூபாய் முறைகேடு செய்துவிட்டதாக ரவி மீது பலி சுமத்தியுள்ளனர். இது குறித்த எந்த புகாரும் கத்தார் நாட்டில் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், திருச்சியில் உள்ள குரு ஹோட்டலுக்கு ரவி மற்றும் அவரது மனைவியை அழைத்து தனியறையில் அடைத்து வைத்து, அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். அப்போது வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, குரு ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்டோர் உடன் இருந்துக்கொண்டு 15 லட்ச ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டதாகக் கூறும் ரவி, மேலும் தங்களது வீட்டையும் அபகரித்துக்கொள்ள முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரவி, அவரது மனைவி விஜயராணி, மகள்கள் ரேணுகா, ப்ரீத்தி ஆகியோர் இன்று வந்திருந்தனர். வணிகர் சங்கத்தினர் அதிகார பலத்துடன் தொடர்ந்து தங்களை துன்புறுத்துவதால், 'தங்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய பாதாகையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். தொடர்ந்து மிரட்டி பணம் பறிக்கும் குற்றவாளிகள் குறித்த வீடியோ, ஆடியோ ஆதாரங்களை கொடுத்தால், அதனை காவல்துறையினர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என பாதிக்கப்பட்ட ரவியின் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

வரும் 5ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தமிழக வணிகர் விடியல் மாநாட்டில், தமிழக முதல்வர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். இந்த கோவிந்தராஜுலுவிற்கு எதிராகத்தான் தற்போது புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com