மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்ததுதான் தற்போது தமிழக அரசியலில் முக்கியமான பேசு பொருளாக இருக்கின்றது.
வழக்கமாக மிகக் குறைவான நேரமே இந்த இரண்டு தலைவர்களின் சந்திப்புகள் எப்போதும் நடக்கும். ஆனால், இந்த முறை சுமார் 50 நிமிடங்கள் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நீடித்துள்ளது. இதில் பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறும் தகவல்களின் படி, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி இந்த சந்திப்பில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் இரண்டு தரப்புகளுமே தங்கள் தரப்பு நிபந்தனைகளையும் முன் வைத்திருக்கிறார்கள்.
இதில் பா.ஜ.க.வை பொறுத்தவரை, கடந்த தேர்தலில் ஒதுக்கியதை விட இந்த முறை கூடுதல் இடங்கள் நிச்சயம் வேண்டும் என்பதுதான் முக்கிய நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கொங்கு பகுதியிலும், அதிலும் குறிப்பாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதியையும் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபோக, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படுகிறதோ அதற்கு இணையாக அல்லது அதைவிட அதிகமாக வேண்டும் என பாஜக தரப்பு விரும்புகிறது.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவெனில், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பார். அதோடு 400 இடங்களில் வெற்றி என்ற இலக்குடன் செயல்படுவதாலும், இந்த முறை அதிக இடம் வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. தரப்பில் கேட்கப்படுவதற்கான விஷயங்களாக முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விரைவாகத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட வேண்டும் என்று பா.ஜ.க. தரப்பில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் தற்போது இருந்தே மத்திய அமைச்சர்களை களம் இறக்கும் திட்டத்தை ஏற்கெனவே பா.ஜ.க. வகுத்து வைத்திருப்பதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் அ.தி.மு.க. சார்பிலும் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அதன்படி, தற்போதைய தி.மு.க. அரசின் மீதான முறைகேடு புகார்கள் மீது மத்திய அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தாங்கள் மட்டுமே அ.தி.மு.க. என்பதால் ஓ.பி.எஸ். தரப்பிடம் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்றும், ஓ.பி.எஸ். தரப்பினரை சந்திப்பது உள்ளிட்டவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், கூட்டணியில் பிரச்னை ஏற்படும் வகையில், அண்ணாமலை செயல்படுவது குறித்தும், புகார் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடன் சென்ற நிர்வாகிகள், அவருக்கு தக்க அறிவுரை கூறும்படி கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் கூட்டணியை சுமூகமாக தொடர்ந்து எடுத்துச் செல்ல டெல்லி பா.ஜ.க. தலைமை முழு ஒத்துழைப்பு வழங்கும் என அமித்ஷா உறுதியளித்திருப்பதாகவும், இதனால் இரு தரப்பிற்கும் இந்த சந்திப்பு நிறைவான சந்திப்பாகவே முடிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.