சாலையில் கட்டிவைக்கப்பட்டிருந்த மாடு திடீரென சாலையின் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழப்பு.
வேலூர் சத்துவாச்சாரி கானார் தெருவைச் சேர்ந்தவர் ராமு (32) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த இவருக்கு ஜீவிதா என்ற மனைவியும், 2 ஆண், 1 பெண் என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராமு, நேற்றிரவு (24.02.2023) தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காகிதப்பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது சாலையோரம் கட்டப்பட்டிருந்த காளை மாடு திடீரென சாலைக்கு வந்துள்ளது.
இதை சற்றும் எதிர்பாராத ராமு, மாட்டின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதில் டயரில் சிக்கிய ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அரசு பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து பொது மக்கள் கூறுகையில், காகிதபட்டறை பகுதியில் சுமார் 20, 30 மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிறமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் சுற்றும் மாடுகளால் பலமுறை விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.