செய்தியாளர்: மகேஷ்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து அண்ணாமலையாரை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். அதேபோல், திருவண்ணாமலை நகரம், மாட வீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாதுக்கள் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில், தேரடி வீதியில், முருகர் தேர் பக்கத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு மண்டை ஓடுகளுடன் கூடிய கார் நிறுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் வாகன எண் இருக்கும் இடத்தில் அகோரி நாகசாது என்ற பெயர் பலகையுடன் நீண்ட நேரமாக கார் நின்றிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் காரின் அருகில் சென்று காருக்குள் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து கொண்டிருந்த நிலையில், காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காரில் பல்வேறு மண்டை ஓடுகள் இருந்ததுடன், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு புகைப்படங்களும், பெண்களை முகம் சுளிக்க வைக்கும் புகைப்படமும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், காரில் இருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டனர். இதைத் தொடர்ந்து 1 மணி நேரம் கழித்து வந்த காரின் உரிமையாளர், கழுத்து நிறைய ருத்ராட்ச கொட்டையும், நெற்றி நிறைய விபூதி பட்டையுடன் அகோரியை போன்று இருந்தார்.
இதைத் தொடர்ந்து அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்குள் அழைத்துச் செல்ல முயற்சித்தனர். அப்போது அவர், என் பெயர் கடவுள். நானே சிவன், பிரம்மா, விஷ்ணு எனக் கூறி உடலில் உள்ள ஆடைகளை களைந்து காவல் நிலையத்திற்குள் சென்றதால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை காருக்குள்ளேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ரிஷிகேஷ் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், கார் பார்க்கிங் செய்ய இடம் ஏதும் இல்லாததால் சாலையிலேயே நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினார்.
இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியதாகவும் அகோரி மீது வழக்குப் பதிவு செய்யாமல் ரூபாய் 3000 அபராதம் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.