ஃபேஸ்புக் மூலம் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 26ஆம் தேதி காணாமல் போனதால், அவரது பெற்றோர் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியின் செல்போனை ஆய்வு செய்து இப்ராஹிம் என்ற 21வயது இளைஞரை பிடித்து, காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது, சிறுமியை புதுச்சேரி அழைத்துச் சென்று தனியறை எடுத்து தங்கிய அந்த இளைஞர், அவரை அங்கேயே விட்டுவந்தது தெரியவந்தது. விவரம் தெரியாத 13 வயது சிறுமி, புதுச்சேரியில் தனியாக இருப்பதை அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவரை மீட்டனர்.
சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிவா என்ற பெயரில் ஃபேஸ்புக் மூலம் இப்ராஹிம் அறிமுகமானது தெரியவந்தது. செல்போன் எண்கள் பரிமாறப்பட்டு இருவரிடையே பழக்கம் அதிகரித்துள்ளது. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய இப்ராஹிம், அவரை புதுச்சேரி அழைத்து தனியறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு இப்ராஹிம் மோசடி செய்பவர் என்பது தெரியவந்ததும், அவரிடம் சிறுமி சண்டையிட்டுள்ளார். இதனால் விடுதியிலேயே சிறுமியை விட்டுவிட்டு இப்ராஹிம், திருப்பூர் திரும்பியிருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த சிறுமியின் நிலையை அறிந்த விடுதி உரிமையாளரும் அவருக்கு பாலியல் தொந்தரவு தந்துள்ளார். பாலியல் தொல்லை கொடுத்த இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு மூலக்காரணமாக இருந்தது சிறுமியின், அறியாமைதான்.
ஃபேஸ்புக்கில் அறிவு சார்ந்த கருத்துகள், பொழுதுபோக்கு அம்சங்கள் என பல்வேறு அம்சங்கள் இருக்கிற வேளையில், இதுபோன்ற மோசடிக்கும் இதில் இடமுண்டு. ஆகையால், சமூக வலைதளங்கள் குறித்த புரிதலும், அவற்றைப் பயன்படுத்துவது தொடர்பாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பெற்றோரின் தலையாய கடமையாக இருக்கிறது.