நீலாங்கரை அருகே விலையுயர்ந்த 2 செல்போன்கள் மற்றும் பணத்துடன் சாலையில் கிடந்த கைப்பையை ஒரு சிறுவன் நேர்மையாக காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஆகாஷ் என்ற சிறுவன் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது
சாலையில் கிடந்த ஒரு கைப்பையை பார்த்ததும், யாரோ தவறவிட்டு சென்றுள்ளதை உணர்ந்து அதில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அத்துடன் கைப்பையை நீலாங்கரை காவல்நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். பின்னர் கைப்பையை நீலாங்கரை காவல் ஆய்வாளர் நடராஜனிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த சென்னை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த முகமது நசீம் உதீன் (40), அவருடைய கைப்பையை பெற்றுக்கொண்டார். நேற்று மாமல்லபுரத்தில் தான் பணிபுரியும் பள்ளிக்கு மனைவியுடன் சென்றபோது கனமழை பெய்ததாகவும், அந்தச் சமயத்தில் கைப்பையை தவறவிட்டதையும் கூறியுள்ளார். அந்தக் கைப்பையில் விலை உயர்ந்த இரண்டு செல்போன்கள், ரூ.3,000 பணம், ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்டவை இருந்துள்ளன. தனது பையை எடுத்துக்கொடுத்த சிறுவன் ஆகாஷூக்கு நசீம் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
சாலையில் கிடந்த கைப்பையை நேர்மையாக ஒப்படைத்த சிறுவன் ஆகாஷூக்கு, காவல் ஆய்வாளர் நடராஜன் சாக்லெட் மற்றும் பேனாவை பரிசாக கொடுத்து பாராட்டினார். ஆகாஷ் கடந்த 2014ஆம் ஆண்டு ஹெல்மெட் விழிப்புணர்வு, கருவேலம் மர அகற்றும் விழிப்புணர்வு மற்றும் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் போன்றவற்றை சிறுவயதிலேயே கையில் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆகாஷ் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.