கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள மலை கிராமத்திலிருந்து 108 ஆம்புலன்ஸ் முலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு, வாகனத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள விளாங்கோம்பை மலை கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஜோதிக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டி.என்.பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு ஜோதி அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் ஜோதி.
அப்போது அடர்ந்த வனப் பகுதியில் காட்டாறுகளை கடந்து வரும் வழியில் ஜோதிக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் சங்கர், பிரசவ வலியால் துடித்த ஜோதிக்கு அங்கேயே பிரசவம் பார்த்தார். இதில், ஜோதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து தாயும், குழந்தையும் பத்திரமாக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அடர்ந்த வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளரை பொதுமக்கள் பாராட்டினர்.