ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து... மூன்று நபர்கள் மருத்துவமனையில் அனுமதி.
பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த பணியில் எதிர்பாராத விதமாக இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. - அமைச்சர் சேகர் பாபு பேட்டி.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சொந்தமான 60 ஆண்டு கால பழமை வாய்ந்த ஆண்கள் விடுதி ஒன்று பாரிமுனை பேருந்து நிலையம் அருகே உள்ளது. தற்போது மாணவர்கள் யாரும் தங்காமல் செயல்படாத நிலையில் இருக்கும் இந்த நான்கு மாடி கட்டடம் இருக்கும் இடத்தில் உயர்நீதிமன்ற கட்டிடம் ஒன்று கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் செயல்படாமல் இருக்கும் ஆண்கள் விடுதி கடந்த 15 நாட்களாக இடித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 10:20 மணியளவில் நான்கு மாடி கட்டிடத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்த போது திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி பாரிமுனை பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சரிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த திநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், பாரிமுனை பேருந்து நிலையப் பகுதிகளில் பிளாட்பார்மில் தங்கி வரும் லட்சுமணன், சொக்கலிங்கம் ஆகிய மூவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக மூவரையும் மீட்டனர். இதில், விஸ்வநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து மூன்று நபர்களையும் உடனடியாக அப்பகுதி பொதுமக்களே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அனுப்பி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூக்கடை போலீசார் மற்றும் எஸ்பிளனேடு, எழும்பூர், உயர்நீதிமன்ற வளாக தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 30க்கும் மேற்பட்ட வீரர்கள் இடிபாடுகளில் வேறு யாரிடம் சிக்கி உள்ளனரா? என்பது குறித்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்து ஆய்வு மேற்கொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் உயர்நீதிமன்ற கட்டடம் ஒன்று வருவதாகவும், அதற்கான பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர் பாதுகாப்பான முறையில் கட்டிடத்தை இடிக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இன்று எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், காயம் பட்ட மூன்று நபர்களும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை முதல்வரோடு தான் பேசி தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.