ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் தன் குடும்பத்தினருடன் நேற்று தீபாவளி கொண்டாடியுள்ளார். அப்போது இவரது நான்கு வயது மகள் நவீஸ்கா, தனது பெரியப்பா விக்னேஷுடன் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது நவிஷ்கா மற்றும் அவரது பெரியப்பா விக்னேஷ் ஆகியோர் கைகளில் பட்டாசு பாக்கெட் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நவிஷ்காவை தூக்கியபடி விக்னேஷ் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது வெடிவெடிக்கும் பொழுது ஏற்பட்ட தீப்பொறி அவர்கள் வைத்திருந்த பட்டாசில் பட்டு வெடித்து சிதற தொடங்கியுள்ளது. இதில் நவிஷ்கா மார்பு பகுதி முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்தது. விக்னேஷின் இடது கையில் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் அந்த நான்கு வயது குழந்தை பலத்த தீக்காயத்தால் அலறி துடித்துள்ளார்.
உடனடியாக இருவரையும் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தையை
பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக
தெரிவித்துள்ளனர்.
கை விரல் துண்டான விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக
சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த வெடி விபத்தின் போது 15க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் சம்பவம் குறித்து வாழைப்பந்தல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு வெடி விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.