மேட்டூர் : 13ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிலை கண்டெடுப்பு!

மேட்டூர் அருகே நங்கவள்ளியில் 2 அடி உயரம் கொண்ட 13ம் நூற்றாண்டின் சோழர் காலத்து பத்ரகாளியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் நங்கவள்ளியில் கண்டெடுக்கப்பட்ட சோழர் கால சிலை
மேட்டூர் நங்கவள்ளியில் கண்டெடுக்கப்பட்ட சோழர் கால சிலைபுதிய தலைமுறை
Published on

மேட்டூர் அருகே நங்கவள்ளியில் 2 அடி உயரம் கொண்ட 13ம் நூற்றாண்டின் சோழர் காலத்து பத்ரகாளியம்மன் கருங்கல் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

மேட்டூர் அருகே நங்கவள்ளியில் ரேஷன் கடை, இ - சேவை மையத்திற்கு இணையதள சேவை வழங்க பாரத் கேபிள் நிறுவனம் மூலம் கண்ணாடி நுண்யிலை கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக ஜே.சி.பி, இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது, கல்லொன்றில் மோதுவதுபோன்று சத்தம் கேட்டுள்ளது.

ஜேசிபி
ஜேசிபிபுதிய தலைமுறை

இதனை உணர்ந்த ஜேசிபி ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே சென்று மண்வெட்டி மூலமாக தோண்டி பார்க்கும் போது, 2 அடி உயரம் கொண்ட 13ம் நூற்றாண்டு சோழர் காலத்தில் செதுக்கப்பட்ட பத்ரகாளியம்மன் கருங்கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து நங்கவள்ளி வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த் துறையினர், பத்ரகாளியம்மன் சிலையை மீட்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின் இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு
நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் குடியிருப்புபுதிய தலைமுறை

இதற்கிடையே சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்த தகவல் மக்களிடையே பரவியது. இதனால் நங்கவள்ளி சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் அம்மன் சிலைக்கு பட்டாடை உடுத்தி மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

இந்த பத்ரகாளியம்மன் சிலை 13ம் நூற்றாண்டு கடைசியில் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் 7ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட 2 நடுகற்களும், 10ம் நூற்றாண்டின் சோழர் காலத்து செக்கும் கண்டெடுக்கப்பட்டது.

மேட்டூர் நங்கவள்ளியில் கண்டெடுக்கப்பட்ட சோழர் கால சிலை
மேட்டூர் நங்கவள்ளியில் கண்டெடுக்கப்பட்ட சோழர் கால சிலைபுதிய தலைமுறை

சோழர் காலத்தில் ஆன்மீக பூமியாக இருந்த நங்கவள்ளியில் தொடர்ந்து பல்வேறு பிரதான சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில் தொல்லியல் துறையினர் நங்கவள்ளி பகுதியில் அகழாய்வு செய்து சோழர்காலத்து சிற்பங்களையும் வாழ்க்கை முறைகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

- செய்தியாளர் : மேட்டூர் பாலகிருஷ்ணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com