9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் விடுபட்டிருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. அதில் தற்போது வரை 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
அதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 பேரும், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,671 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேரும் மனுதாக்கல் செய்திருக்கின்றனர். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.