நெல்லை பாளையங்கோட்டையில் 142 ஆண்டுகள் பழமையான தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் "96 பேட்ச்" மாணவர்களின் 25 ம் ஆண்டு வெள்ளிவிழா சந்திப்பு இன்று கொண்டாடப்பட்டது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி 1880-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 142 ஆண்டுகளாக தொடர்ந்து பாரம்பரியமிக்க பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1991 முதல் 96 வரை பயின்ற மாணவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் இன்று பள்ளி வளாகத்தில், வெள்ளிவிழா சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள்.
1991-96 காலக்கட்டத்தில் படித்த அன்றைய மாணவர்களில் சிலர் இன்று பல கல்லூரி குழுமங்களின் இயக்குநர்களாக, கல்லூரி முதல்வராக, தலைமை ஆசிரியர்களாக, கல்லூரி பேராசிரியராக, மருத்துவராக, கணிப்பொறி வல்லுநர்களாக, மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளாக, ஊடகவியலாளராக, கட்டட வல்லுனர்கள் ஆக, தொழிலதிபர்களாக, விவசாயிகளாகவும் சீரும் சிறப்புமாக பள்ளியின் பெருமையை பறைசாற்றும் வகையில் உயர்ந்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு முதல் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி 250 பேர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் பரதநாட்டியம், தொடங்கி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மதியம் அறுசுவை உணவுடன் வெள்ளி விழா நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக "96 நண்பர்கள் குழு" சார்பாக பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட நிதியாக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். இதனைத்தொடர்ந்து வந்திருந்த முன்னாள் மாணவர்கள், தங்களுடைய மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
-நெல்லை நாகராஜன்