நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கருவுற்ற தாய்மார்கள் பாதிக்காத வண்ணம் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதும் 696 கருவுற்ற தாய்மார்கள் கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்களில் சிக்கல் நிறைந்த 24 பேர் மீட்கப்பட்டு அம்பாசமுத்திரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும், நெல்லை மாவட்டம் முழுவதும் 142 பேர் மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 91 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது என்றும் நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்திலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள கருவுற்ற தாய்மார்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி புஷ்பா நகரைச் சேர்ந்த பெண் ஒருவரை கனிமொழி எம்.பி. நேரில் சென்று மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.