ஈரக்கையோடு மொபைல் சார்ஜரை கழற்ற முயன்ற 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

ஈரக்கையோடு மொபைல் சார்ஜரை கழற்ற முயன்ற 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்
ஈரக்கையோடு மொபைல் சார்ஜரை கழற்ற முயன்ற 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்
Published on

செல்போன் சார்ஜரை கழற்றும் போது மின்சாரம் பாய்ந்து 9 வயது சிறுவனொருவர் உயிரிழந்திருக்கிறார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருபவர் செந்தில். இவர் தனது மகனுக்கு பள்ளி விடுமுறை நாள் என்பதால் தனது குடுப்பத்தோடு சொந்த ஊரான வேலூர் மாநகருக்குட்பட்ட சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை (24.05.2022) செந்திலின் 9 வயது மகன் கோபிநாத் வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை ஜார்ஜரில் இருந்து எடுக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கிவிழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு வேலூர் பழைய அரசு பெண்ட்லெண்ட் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாரையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட தகவலின்படி வீட்டில் அத்தையின் செல்போன் சார்ஜ் போடப்பட்டிருந்த போது, குளித்துவிட்டு ஈரக்கையோடு வந்த சிறுவன் சார்ஜரில் இருந்த செல்போனை எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். செல்போன் சார்ஜரில் எடுக்க முயன்று மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின் சாதனங்கள் பெருகி காணப்படும் இந்த நவீன உலகில், குழந்தைகள் இருக்கும் வீட்டினர் மிகுந்த எச்சரிக்கையோடும், மின்சாதன பொருட்கள் குழந்தைகளின் கைக்கு எட்டாதவாறும் வைப்பது விபத்துக்களை தடுக்க உதவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com