கிருஷ்ணகிரி: பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழப்பு 9 ஆக அதிகரிப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் இன்று (ஜூலை 29) ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மேல்தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவர், பழையபேட்டை சென்னை சாலையில் பட்டாசு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே பைனான்ஸ், மரக்கடை, உணவகம், வெல்டிங் பட்டறை தண்ணீர் கேன் குடோன், பழுது பார்க்கும் கடை மற்றும் மூன்று வீடுகள் உள்ளன.

இந்த நிலையில், இன்று காலை 9.50 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பட்டாசு கடையில் இருந்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகம் உட்பட ஏழு கடைகளும் தரைமட்டமாகின. வெடி விபத்தில் பட்டாசு கடையில் இருந்த கடை உரிமையாளர் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

அதேபோல் அருகில் இருந்த இப்ராகிம், இம்ரான், ராஜேஸ்வரி, சரசு ஜேம்ஸ் ஆகியோரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சாலையில் சென்ற பலரும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் தற்போது வரை 9 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் உணவகத்தில் இருந்த கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ பரவியதாகக் கூறப்படுகிறது.

மற்றொருபுறம் விதிகளுக்கு மாறாக அதிகளவில் பட்டாசுகள் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com