தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்திலில் ஈடுபட்டால் கடத்தல்காரர்கள் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என தென்மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களைக் கொண்ட காவல்துறை தென் மண்டல ஐஜியாக அஷ்ரா கார்க் நியமிக்கப்பட்டதிலிருந்து கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு தனிப்படை மற்றும் வாகன சோதனையை தீவிரப்படுத்துதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் கஞ்சா கடத்தல் தொடர்பான அறிக்கை ஒன்று தென்மண்டல ஐஜி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் 114 வழக்குகளில் 191 வங்கிக் கணக்குகளும், விருதுநகர் மாவட்டத்தில் 76 வழக்குகளில் 119 வங்கிக் கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 வழக்குகளில் 116 வங்கிக் கணக்குகளும், தேனியில் 81 வழக்குகளில் 146 வங்கிக் கணக்குகளும், ராமநாதபுரத்தில் 28 வழக்குகளில் 56 வங்கிக் கணக்குகளும், சிவகங்கையில் 12 வழக்குகளில் 16 வங்கிக் கணக்குகளும், நெல்லையில் 14 வழக்குகளில் 22 வங்கிக் கணக்குகளும், தென்காசியில் 11 வழக்குகளில் 20 வங்கிக் கணக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 22 வழக்குகளில் 36 வங்கிக் கணக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 59 வழக்குகளில் 91 வங்கிக் கணக்குகள் என தென் மண்டல காவல்துறையின் கீழ் செயல்படும் 10 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 494 வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.