''ஊழலின் ஊற்றுக்கண்ணே ராஜேந்திர பாலாஜிதான்; அவர்கள் கம்பி எண்ணுவது உறுதி''- அமைச்சர் நாசர்

''ஊழலின் ஊற்றுக்கண்ணே ராஜேந்திர பாலாஜிதான்; அவர்கள் கம்பி எண்ணுவது உறுதி''- அமைச்சர் நாசர்
''ஊழலின் ஊற்றுக்கண்ணே ராஜேந்திர பாலாஜிதான்; அவர்கள் கம்பி எண்ணுவது உறுதி''- அமைச்சர் நாசர்
Published on

ஊழலின் ஊற்றுக்கண்ணே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான், கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணுவது உறுதி என்று பால்வள துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

ஆவடி அருகே திருமுல்லைவாலில் செயல்பட்டு வரும் விதையின் உதயம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. எஸ் பி வேலுமணி பல ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக, அதே கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோர் கவர்னரிடம் சென்று மனு கொடுத்திருந்தனர். அரசியல் உள்நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது என்று கூறுகிறவர்கள் இவர்களின் செயலை என்ன சொல்லுவார்கள்.

தற்போதைய நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் படி ஒவ்வொருவர் தலையிலும் 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கடனாக இருக்கிறது. இந்த பணம் எங்கு சென்றது. ஒட்டுமொத்தமாக நாட்டையே அமைச்சர்களும் அவர்கள் சகாக்களும் சுரண்டி விட்டு சென்று விட்டனர். உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையிலேயே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது அரசின் உள் நோக்கம் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கும் இதே நிலைதான்.

தவறு செய்தவர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு உறுதியளித்திருந்தார். அதன்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடுக்கை எடுக்கப்படும். அவர்கள் கம்பி எண்ணப்போவது நிச்சயம். ஊழல் செய்தவர்களில் முக்கியமானவர் ராஜேந்திர பாலாஜி. ஊழலின் ஊற்றுக் கண்ணே அவர்தான். அவர்மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும். ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். உப்பு சாப்பிட்டவர்கள் நிச்சயம் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து, சென்னை வளசரவாக்கத்தில், தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவையின் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், விவசாயிகளிடமிருந்து ஒரு லிட்டர் பாலை 32ரூபாய்க்கு கொள்முதல் செய்து, அதனை 42ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதில் மொத்த வியாபாரிகளுக்கு ஒரு ரூபாய் 50காசும், சில்லறை வியாபாரிகளுக்கு 75காசையும் அளிப்பதாகவும், தமிழகத்தில் 80 ஆயிரம் ஆவின் போலி கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com