தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன.
10,399 கோடி ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் தொழில் தொடங்க 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன. 5 திட்டங்கள் நேரடியாகவும் 3 திட்டங்கள் காணொலிக்காட்சி மூலமும் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 13 ஆயிரத்து 507 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஓரகடத்தில் 5423 கோடி மதிப்பீட்டில் விக்ரம் சோலார் என்ற நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 7542 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 4000 கோடி மதிப்பீட்டில் ஓரகடத்தில் இருக்கும் யோட்டா என்ற நிறுவனம் மூலம் 2500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
250 கோடி மதிப்பீட்டில், கோயம்புத்தூரில் அமைய இருக்கும் இ.எல்.ஜி.ஐ என்ற நிறுவனம் மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 250 கோடி மதிப்பீட்டில் வாலாஜாபாத்தில் அமைய இருக்கும் சிஜிடி நிறுவனம் மூலம் 1500 பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் நிறுவனமும், கோயம்புத்தூரில் அக்குவா குரூப் நிறுவனமும் தலா 200 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க உள்ளது. 40 கோடி மதிப்பீட்டில் ஜெ.எஸ் ஆட்டோ கேஸ்ட் நிறுவனமும் 36 கோடியில் ஜி.ஐ. அக்ரோ டெக் நிறுவனமும் தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களில் 25 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதில் 25,527 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.