மதுரையில் நேற்றைய தினம் அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். குறிப்பாக சாலைகளிலும், மாநாட்டுத் திடலிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டதால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. அலைகடலென திரண்ட கூட்டத்தினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கூட்டநெரிசலில் சிக்கி நெஞ்சுவலி, வலிப்பு உள்ளிட்ட பாதிப்புகளால் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்க வரும்போதும், பங்கேற்று திரும்பியபோதும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு நிவாரணமும் அறிவித்துள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களுக்கு ரூ.6 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.பொன்னுசாமி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சென்னையன், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சி.கதிரேசன், எஸ்.பழனிச்சாமி, மாரிமுத்து, தென்காசியைச் சேர்ந்த ஆர்.வாசுதேவன், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கடற்கரை, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பி.சாம்பசிவம் ஆகியோர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.