2012ல் தனியார் பேருந்திலிருந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் - வெளியானது தீர்ப்பு

2012ல் தனியார் பேருந்திலிருந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் - வெளியானது தீர்ப்பு
2012ல் தனியார் பேருந்திலிருந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் - வெளியானது தீர்ப்பு
Published on

தனியார் பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை சேலையூர் சீயோன் பள்ளியில் 2012ஆம் ஆண்டு 2-ம் வகுப்பு படித்து வந்தார் ஸ்ருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரைச் சேர்ந்த மாதவன் என்பவரின் மகள் ஆவார். தினமும் பள்ளிக்கூட பேருந்தில் பள்ளிக்கு செல்லும் ஸ்ருதி, 2012 ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வீடு திரும்பி கொண்டிருந்தபோது, மாணவி ஸ்ருதி அமர்ந்திருந்த இருக்கை ஆடியது. அப்போது இருக்கையின் அடிப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக ஸ்ருதி கீழே சாலையில் விழுந்தார். அப்போது அதே பேருந்தின் சக்கரம் ஸ்ருதியின் தலையில் ஏறியதில் அவர் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பள்ளி தாளாளர் விஜயன், அவர்களது சகோதரர்களான ரவி, பால்ராஜ், பேருந்து ஓட்டுநர் சீமான், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், பேருந்து உரிமையாளர் யோகேஷ் சில்வேரா மற்றும் கிளீனரான 17-வயது சிறுவன் உள்ளிட்ட 8-பேரை கைது செய்தனர். 
இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் 35 சாட்சிகளிடமும், பள்ளி தரப்பில் 8 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டன. இந்த வழக்கில் அரசு சார்பில் 35 சாட்சிகள் அளிக்கப்பட்டாலும் முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதால், அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட புகார்கள் நிரூபிக்கப்பட முடியாமல் போனது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி காயத்ரி தீர்ப்பளித்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் அரசு சார்பில் குற்றவாளியாக சுமத்தப்பட்ட 8 பேரும் விடுதலை ஆகியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வாங்கித்தர வழக்கை அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com