குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை மெரினாவில் இன்று தேசிய கொடியை ஏற்றினார்.
70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை மெரினாவில் தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
இதன்பின் நடைபெற்ற முப்படை வீரர்கள், காவல் துறை மற்றும் பல்வேறு படை பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை சென்னையை சேர்ந்த சூர்ய குமார், தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், தஞ்சையை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு வழங்கினார்.
இதையடுத்து, சிறப்பாக செயல்பட்ட, ஏ.டி.எஸ்.பி. வேதரத்தினம் (கடலூர்), ஆய்வாளர் பிரகாஷ் (ஓசூர்), உதவி ஆய்வாளர் ராஜேந்திரன்(அரியலூர்), சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருக்குமார் (திருச்சி), தலைமைக் காவலர் கோபி (நாமக்கல்) ஆகிய 5 காவல் துறையினருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை வழங்கினார்.
வேளாண் துறை சிறப்பு விருது, புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு செட்டியாப்பட்டியை சேர்ந்த விவசாயி சேவியருக்கு வழங் கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதை ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச் சர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.