கல்லூரி மற்றும் பள்ளி காலங்களின் அனுபவம் என்பதும், அந்த பழைய நாட்களின் நினைவு என்பதும் ஒரு அலாதி காதலாகவே நம் எல்லோர் மனதிற்குள்ளும் இருந்துகொண்டிருக்கும். கல்லூரி நாட்களை விட இளமையின் ஆரம்பப்புள்ளி காலங்களான பள்ளிப்பருவம் என்பது எல்லோருக்கும் கூடுதலான மகிழ்ச்சியை தான் கொடுத்திருக்கும்.
அதனால் தான் சமீபத்தில் பல முன்னாள் மாணவர்கள் ஒன்றாக சந்திப்பு நடத்துவதும், அதற்கு தங்களது ஆசிரியர்களை அழைப்பதும், அவர்களிடம் அதே பழைய மாணவர்களை போல் நடந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் நடந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது விருதுநகரில் படித்த முன்னாள் மாணவிகள் நடத்தியிருக்கும் சந்திப்பு நிகழ்ச்சியானது காண்போருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், 1972 -1973ஆம் ஆண்டு விருதுநகர் சத்ரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவியர்கள் 50 வருடங்கள் கடந்து சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி மகிழ்ந்தனர். இந்த சந்திப்பு கூட்டம் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவிகளின் பள்ளி ஆசிரியைகளான காஞ்சனா மற்றும் புஷ்பமணி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அவர்களுக்கு பழைய மாணவியர்கள் மரியாதை செய்தனர்.
கூட்டத்தில் 64 முன்னாள் மாணவியர்கள் கூடி விளையாட்டு நிகழ்ச்சிகள், அனுபவங்கள், பள்ளி பருவ நாட்களில் நடந்த நினைவுகள் ஆகியவற்றை உணர்வுபூர்வமுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவி ரோகினி செய்திருந்தார். 50 ஆண்டுகள் கழித்து பழைய மாணவிகள் சந்தித்து மகிழ்ந்தது இப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.