வேலூரில் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவை சேர்ந்த மெல்வின் தேஷ்முக் என்பவர் புல் சாகல் ரயில் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு காரில் தனது குடும்பத்தினருடன் வேலூர் தங்க கோயிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஜமீன் என்ற பகுதியில் வரும்போது காரின் முன்பக்க டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 ஆண்கள் 2 பெண்கள் 2 சிறுவர்கள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரிலிருந்து 4 பேர் உடல்களை மீட்க முடியாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் போராடினர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு சென்ற குடும்பம் விபத்தில் சிக்கிய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.