செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியை அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகு மூலம் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக மெரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மெரைன் போலீசார், பெரியபட்டிணம் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு நாட்டுப் படகை மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில், 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்த மெரைன் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த முகமது மீராசா என்பவரை கைது செய்து புதுமடம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளின் மதிப்பு சுமார் 2.60 கோடி இருக்கும் எனவும், இலங்கையில் சுமார் 7 முதல் 8 கோடி ரூபாய் வரை மதிப்புடையது எனவும், வலி மாத்திரைகள் போதைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.