வாணியம்பாடியில் இரு வணிகர் சங்கங்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரமராஜா தலைமையில் இயங்கிவரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சங்கம் சார்பில் மே 5ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டில் முதல்வர் கலந்துகொள்ளும் நிலையில், அதற்காக வாணியம்பாடியில் வணிகர் சங்க அமைப்பினர் சார்பாக கடைகளை அடைத்து மாநாட்டில் பங்கேற்க வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் எதிர்தரப்பை சார்ந்த வெள்ளையன் தலைமையில் இயங்கிவரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சங்கத்தினர் மே 5 கடையடைப்பு இல்லை என அச்சிட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தனர். அப்போது ஏற்பட்ட மோதலால் இரு வணிகர் சங்கங்களை சேர்ந்த 7 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடனடியாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளை கைது செய்ய கோரி விக்கிரமராஜா தலைமையில் இயங்கி வரும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பினர் நாளை வாணியம்பாடி முழுவதும் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.