தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக, தமிழகத்தில் 67 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிலாளர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று முழு அடைப்பு மற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இந்தியா முழுக்க பொது போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது; முக்கியமான வணிக நிறுவனங்கள் அடங்கியுள்ள பகுதிகள் முழுவதும் கடைகள் பல அடைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, தமிழகத்தில் அன்றாடம் இயக்கப்பட வேண்டிய 15,335 பேருந்துகளில் 5,023 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வழக்கமாக இயற்றப்படும் பேருந்துகளில் 10 சதவிகித மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும்; 85 சதவிகித விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் 27 சதவிகிதமும், சேலத்தில் 37 சதவிகிதமும், கோவையில் 21 சதவிகிதமும் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கும்பகோணத்தில் 57 சதவிகிதமும் மதுரையில் 38 சதவிகிதமும் நெல்லையில், 41 சதவிகிதமும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பார்க்கையில், தமிழகத்தில் சராசரியாக 33 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.