ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் பொழுதுபோக்குக்காக வீணாக்குபவர்களுக்கு மத்தியில் 60 வயதான முதியவர் ஒருவர் யூடியூப் மூலம் பண மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.
வில்லேஜ் புட் பேக்டரி. யூடியூப் மூலம் வீடியோக்களை பார்ப்பதில் நேரம் செலவிடுவோருக்கு இந்த பெயர் வெகுவாக பரிச்சயமாகி இருக்கும். இந்த வில்லேஜ் புட் பேக்டரியின் ஹீரோ 60 வயதான ஆறுமுகம்தான். சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருந்தவரின் சமையல் திறனை வெளி உலகிற்கு பிரபலப்படுத்தியவர் ஆறுமுகத்தின் மகன் கோபிநாத். திரைப்படத்துறையின் உதவி இயக்குநராக முட்டி மோதிக்கொண்டிருந்தவர் தனது தந்தையின் சமையல் பதிவுகளை வில்லேஜ் புட் பேக்டரியில் பதிவேற்றி வருகிறார். இவரது வில்லேஜ் புட் பேக்டரி தளம் 3 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. 66 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர்.
முழு ஆட்டுக்கிடாவை அவித்து, சமைப்பது, முழு கோழியை இட்டு சமைப்பது, 300 முட்டைகளை கொண்டு கிரேவி செய்வது என ஆறுமுகத்தின் சமையல் முறைகள் பார்ப்பவர்களை வெகுவாக ஈர்க்கிறது. வாரத்துக்கு ஒரு வீடியோ யூடியூபில் அப்லோடு செய்கிறார்கள் இவர்கள். யூடியூபில் இவரது சமையல் நுட்பங்களை பார்க்கும் உள்ளூர்வாசிகள், அவற்றை ருசிக்க நேரடியாகவே அவரை சந்தித்து வருகின்றனர். பொழுது போக்காக அனைவரும் பார்க்கும் தொழில்நுட்பத்தை பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றிய ஆறுமுகத்தின் குடும்பத்தினரை அனைவரும் வியந்து பார்க்கின்றனர்.