ஆவடி: கழிவுநீர் தொட்டியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி

ஆவடி: கழிவுநீர் தொட்டியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி
ஆவடி: கழிவுநீர் தொட்டியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி
Published on

புதிய வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பலியான சம்பவம் ஆவடி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த கொள்ளுமேடு, ஆர்ச் அந்தோணி நகரை சேர்ந்தவர் லாரி டிரைவர் கமலக்கண்ணன் - சங்கீதா தம்பதியினர். இவர்களது மகன் மோகன்ராஜ் (6). இவன் வெள்ளானூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் கமலகண்ணன் வீட்டருகில் புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டிவைத்துள்ளனர். அதனை மூடாமல் திறந்து வைத்துள்ளனர்.

தற்போது பெய்துவரும் மழையால் கழிவுநீர் தொட்டி முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இன்று மாலை வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்த மோகன்ராஜ், திடீரென்று புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளான். அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் தேங்கிய தண்ணீரில் மோகன்ராஜ் தவறி விழுந்துள்ளான். இதனை அப்போது யாரும் கவனிக்கவில்லை. பின்னர், சிறிது நேரம் கழித்து சங்கீதா, மோகன்ராஜை தேடி உள்ளார். அப்போது அவன் கழிவுநீர் தொட்டியில் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளான்.

இதனையடுத்து, அவனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மோகன்ராஜ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவனது உடலை பெற்றோர் கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சியைப் பார்த்த சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com