6  வயது குரங்குக்கு குடல் அறுவை சிகிச்சை - சென்னை கால்நடை மருத்துவர்கள் சாதனை

6 வயது குரங்குக்கு குடல் அறுவை சிகிச்சை - சென்னை கால்நடை மருத்துவர்கள் சாதனை

6 வயது குரங்குக்கு குடல் அறுவை சிகிச்சை - சென்னை கால்நடை மருத்துவர்கள் சாதனை
Published on

6 வயது குரங்கு ஒன்று, பலத்த காயங்ளுடன் உயிருக்குப் போராடியநிலையில், வனத்துறையினர் மற்றும் மருத்துவர்களின் உதவியால், அந்த குரங்குக்கு மறுவாழ்வு கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்கு காப்பாற்றப்பட்டது குறித்து, சென்னை வனவிலங்கு காப்பாளர் பிரசாந்த் கூறியதாவது, “கடந்த 10-ம் தேதி, 'பொநெட் மகாக்' வகையைச் சேர்ந்த 6 வயது குரங்கு ஒன்று, அதிக ரத்தப்போக்குடனும், வயிற்றில் பலத்த காயத்துடனும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸில் இருந்து புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் குழு, சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்திற்கு சென்று படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்த குரங்கை மீட்டனர். பின்னர், சென்னை பெசன்ட் நகரில் உள்ள பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனையில், சிகிச்சைக்காக குரங்கு சேர்க்கப்பட்டது. காயமடைந்த குரங்கை ஆய்வுசெய்தபோது, குடலின் ஒரு பகுதி சேதமடைந்து ரத்தம் வந்துகொண்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து குரங்குக்கு ஸ்கேன் செய்து பார்த்த கால்நடை மருத்துவர்கள் குழு, குரங்குக்கு மயக்க மருந்து அளித்து, குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, குரங்குக்கு மயக்கமருந்து அளித்து, குடலின் சேதமடைந்தப் பகுதிகளை, மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். அதன்பின்னர் அவர்கள், குடலின் மீதமிருந்த பகுதிகளை இணைத்து (enterectomy and anastomosis) சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 3 மணிநேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர், கிண்டி தேசிய பூங்காவிற்கு, குரங்கு அனுப்பப்படும்” இவ்வாறு தெரிவித்தார். இறக்கும் நிலையில் இருந்த ஒரு குரங்கை, உரிய நேரத்தில் மீட்டு, அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் குழு, மறு வாழ்வு அளித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com