கொரோனா தடுப்பு பணிக்கு சென்ற சுகாதார குழு மீது தாக்குதல் நடத்தியதாக 6 பேர் கைது

கொரோனா தடுப்பு பணிக்கு சென்ற சுகாதார குழு மீது தாக்குதல் நடத்தியதாக 6 பேர் கைது
கொரோனா தடுப்பு பணிக்கு சென்ற சுகாதார குழு மீது தாக்குதல் நடத்தியதாக 6 பேர் கைது
Published on

கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார் ஊத்து கிராமத்தில் சுகாதார குழுவினர் மற்றும் சுகாதார ஆய்வாளரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக போலீசார் 6 பேரை கைது செய்தனர்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு அய்யனார் ஊத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரும் அதே பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அனுமதிப்பதற்கு, அப்பகுதிக்கு சுகாதார ஆய்வாளர் காளிராஜ் கடந்த சனிக்கிழமை சென்றார்.

அப்போது, அப்பகுதி பொதுமக்கள் சுகாதார ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு அரசுத் துறையை அவதூறாகப் பேசி, சுகாதார ஆய்வாளரை தாக்கி, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சுகாதார குழுவினரையும் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுகாதார ஆய்வாளர், கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனிஷ் முகம்மது(27), மைதீன்(28), முகம்மது ஆசிக்(19), முகம்மது யூசுப்(74),; நவாஸ்கான்(20),; ஜலால்(48) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com