மர்ம விலங்கு? இரவில் கதறும் ஆடுகள்.. அச்சத்தில் உறைந்த கிராமம்!

மர்ம விலங்கு? இரவில் கதறும் ஆடுகள்.. அச்சத்தில் உறைந்த கிராமம்!
மர்ம விலங்கு? இரவில் கதறும் ஆடுகள்.. அச்சத்தில் உறைந்த கிராமம்!
Published on

விழுப்புரத்தில் ஒரே இரவில் ஆறு ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு, மேலும் இரண்டு ஆடுகளை இழுத்துச் சென்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள செங்காட்டு மலையை ஒட்டிய பகுதியில் உள்ள சாத்தனந்தல், மேல்தாங்கல், சோழங்குணம் கிராமங்களில் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம், கன்று குட்டிகள், ஆடுகள், நாய்களை மர்ம விலங்கு தொடர்ந்து கொன்று வந்தது. அப்போது நீலகிரி வன உயிர், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி, கால்தடம், கழிவுகளை அடையாளம் கண்டு அப்பகுதியில் சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர். கோடை காலத்தில் மலை மீது தண்ணீர் வறண்டதால் அங்கிருந்து கீழ் பகுதிக்கு சிறுத்தை வந்துள்ளது. மழை பெய்ததும் சிறுத்தையின் தாக்குதல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்ய கேமிராக்களையும் வனத்துறையினர் பொருத்தினர்.

அதன்பின்னர் சில நாட்கள் குறைந்திருந்த சிறுத்தையின் தாக்குதல், மீண்டும் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. செங்காட்டு மலைக்கு அருகில் உள்ள இல்லோடு மலை அடிவாரத்தில் இருந்த கால்நடைகள் சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளாகின. அதன்பிறகு மழை துவங்கியதால் சிறுத்தையின் தாக்குதல் நின்றது. இந்நிலையில் கடந்தாண்டு செஞ்சி பகுதியில் பருவமழை சரியாக பொழியவில்லை. ஏரி, குளங்கள் நிரம்பாமல் வறண்டுள்ளன. மலைகளிலும் சுனைகள், நீர்நிலைகள் வறண்டுவிட்ட நிலையில், நேற்று இல்லோடு கிராமத்தில் ஆடுகளை மர்ம விலங்கு கொன்றுள்ளது. மலையடிவாரத்தில் உள்ள சேகர் (37) என்பவர், நேற்று முன்தினம் மாலை தனது விவசாய நிலத்தில் உள்ள ஓலை கொட்டகையில் 10 வெள்ளாடுகளையும், ஒரு குட்டி ஆட்டையும் கட்டி வைத்து விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது ஒரு குட்டியும், ஐந்து ஆடுகளும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தன. அதில் மூன்று ஆடுகள் அருகில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி உயிர் தப்பி இருந்தன. மேலும் இரண்டு ஆடுகளை மர்ம விலங்கு இழுத்து சென்றுள்ளது தெரிய வந்தது. ஆடுகளை தாக்கியது சிறுத்தையா? அல்லது வேறு விலங்கா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக அப்பகுதியினர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மலை அடிவாரத்தில் மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க நான்கு இடங்கிளில் வனத்துறையினர் கேமராக்களை பொருத்தியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com