கடலூரில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை பிடிக்கவிடாமல் பெண் ஒருவர் நீண்ட நேரம் சாமி ஆடினார்.
கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி. இவரது வீட்டில் இன்று 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று நுழைந்தது. இந்த தகவல் தெரியவர, அக்கம்பத்தினர் அங்கு குவிந்தனர். இதையடுத்து உடனடியாக உயிரின ஆர்வலர் செல்லா என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த செல்லா, நீண்ட நேரமாக தேடி வீட்டின் கூறையில் இருந்த பாம்பை கண்டுபிடித்தார். அவர் பிடிக்க முயலும் போது அந்த பாம்பு படம் எடுத்து ஆடத்தொடங்கியது. இதைக்கண்ட வீட்டின் உரிமையாளர் சரஸ்வதி சாமி வந்தது போல ஆடினர். அத்துடன் பாம்பை பிடிக்க வேண்டாம் என்றும், அது அம்மன் என்று கூறினார். நீண்ட நேரமாக அவர் சாமி ஆடியதால் பாம்பை பிடிக்க முடியா சூழல் ஏற்பட்டது.
இறுதியாக சரஸ்வதி சோர்வடைந்து அமைதியாக அமர்ந்தார். அதன்பின்னர் செல்லா சரஸ்வதி எதிரிலேயே பாம்பை பாதுகாப்புடனும், உயிருடனும் பிடித்தார். இதைத்தொடர்ந்து டாப்பாவில் அடைக்கப்பட்ட பாம்பு, உயிருடன் வனப்பகுதியில் விடப்பட்டது.