சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 5-வது நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 47ஆயிரத்து 56 பேர் கண்காணிப்பில் உள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு சென்ற 5-வது நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட பாசிட்டிவ் பட்டியலில் இவரும் ஒருவர். பீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் ஷோரூமில் பணியாற்றிய பணியாளர் உட்பட இருவருக்கு ஏற்கெனவே தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலுக்கு சென்று வந்த ஒரு தம்பதிக்கு தொற்று உறுதியானது.
தற்போது ஐந்தாவது நபராக செஞ்சி பகுதியைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 40க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக சென்னை பீனிக்ஸ் வணிக வளாகத்திற்குச் சென்ற 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஆய்வு செய்ததில், யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என மாநகராட்சி ஆணையர் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.