திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூபாய் 570 கோடி வங்கிப் பணமே என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, திருப்பூரில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், அந்தப் பணம் யாருக்காக, எங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும், விசாரணை அறிக்கை விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூபாய் 570 கோடியும் வங்கிப் பணமே என தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகளின் பணம் ஆந்திராவுக்கு கடத்தல் என கூறப்பட்டு வந்த நிலையில் வங்கிப் பணம் தான் கோவையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சிபிஐ விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வழக்கை தொடர்ந்த டிகேஎஸ் இளங்கோவன், மேலிட உத்தரவால் தான் வங்கிப் பணம் என சிபிஐ என கூறியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கண்டெய்னர் லாரிகளின் பதிவெண் போலி என வழக்கு தொடர்ந்த போதே கூறியபோதும் சிபிஐ அலட்சியமாக இருந்ததுவிட்டு தற்போது வங்கிப் பணம் என சொல்வதாக அவர் கூறியுள்ளார்.