உடல் அரிப்புக்கு மருந்தகத்தில் ஊசி போட்ட தொழிலாளி... சில நிமிடங்களிலேயே நேர்ந்த துயரம்!

உடல் அரிப்புக்கு மருந்தகத்தில் ஊசி போட்ட தொழிலாளி... சில நிமிடங்களிலேயே நேர்ந்த துயரம்!
உடல் அரிப்புக்கு மருந்தகத்தில் ஊசி போட்ட தொழிலாளி... சில நிமிடங்களிலேயே நேர்ந்த துயரம்!
Published on

ஆத்தூர் அருகே உடலில் அரிப்பு ஏற்பட்டதால் தனியார் மருந்தகத்தில் ஊசி போட்ட கூலித் தொழிலாளி உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் தனியார் மருந்தகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வாழப்பாடி அருகே விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சின்ன பையன் (52). இவர், வெள்ளாளப்பட்டியில் உள்ள தனது மகள் பிருந்தா என்பவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்துள்ளார். கூலித் தொழிலாளி சின்ன பையனுக்கு உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டு வந்ததாகவும், அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.

வெள்ளாளப்பட்டியில், சேகடிப்பட்டியைச் சேர்ந்த பூபதி என்பவர் மருந்தகம் (Medical Store) நடத்தி வருகின்றார். இந்நிலையில் சின்ன பையன் உடலில் அரிப்பு ஏற்பட்டதால், மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல், பூபதி நடத்தி வரும் மருந்தகத்திற்கு சென்று மாத்திரை கேட்டுள்ளார். அப்போது மருந்தகம் நடத்தி வரும் பூபதி, சின்ன பையனுக்கு ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது. ஊசி போட்ட சிறிது நேரத்தில் சின்ன பையன், மருந்தகத்திலிருந்து வெளியே வந்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி மற்றும் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், அவரை பரிசோதித்தபோது கூலித் தொழிலாளி சின்ன பையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் கலக்கமடைந்த பூபதி, உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பூபதி தப்பியோடியதை அறிந்து ஆத்திரமடைந்த கூலித் தொழிலாளி சின்ன பையனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீசார் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பிரச்சனையை சரிசெய்தனர்.

பின்னர், சின்னப் பையனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் பூபதி நடத்தி வந்த மருந்தகத்திற்கு பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அன்புச் செழியன் தலைமையில் வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தப்பி ஓடிய மருந்தக உரிமையாளர் பூபதியை, போலீசார் தேடி வருகின்றனர். மருந்தகத்தில் உரிமம் இல்லாமல் ஊசி போட்டு, ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com